நாகர்கோவில்: இரணியல் அரண்மனை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அரண்மனையில் ஓடுகள் வேய்வதற்கு திருச்சூரில் இருந்து ஓடுகள் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்துடன் இணைந்து இருந்தபோது, குறிப்பிட்ட சில ஆண்டுகள் வேணாட்டரசர்களின் தலைநகராக இரணியல் விளங்கியது. பத்மநாபபுரம் தலைநகரான பின்னர், இரணியல் இரண்டாம் தலைநகரமாக இருந்தது. அப்போது கட்டப்பட்ட அரண்மனை இரணியல் மார்த்தாண்டேஸ்வரர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
இந்த கோயில் வஞ்சி மார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டதாகும். கி.பி.12-ம் நூற்றாண்டில் இருந்து இப்பகுதியை அரசாண்ட வேணாட்டரசர்களின் முக்கிய அரண்மனையாக இது விளங்கியது. இது பத்மநாபபுரம் அரண்மனைக்கு முன்னரே இரு அடுக்குகளாக கட்டப்பட்ட அரண்மனையாகும்.
இரணியல் அரண்மனையில் அரசர்கள் ஓய்வெடுக்கும் அறை, அதிகாரிகளும் பிறரும் தங்குமிடம் என்றும் இரு பகுதிகளைக் கொண்டது. 2.5 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்தில் இக்கட்டிடங்கள் உள்ளன. பெரிய அரண்மனைக் கட்டிடம் அருகே அரசக்குடும்பத்தினர் குளிக்க ஒரு சிறு குளமும் உண்டு. பெரிய அரண்மனையின் முன்வாசல் வேலைப்பாடுடையது.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் முதல் இரணியல் அரண்மனை பராமரிப்பின்றி போனது. இங்கிருந்த அழகிய மர சிற்பங்களும், கற்சிலைகளும், விலை உயர்ந்த மரத்தூண்களும் சமுகவிரோதிகளால் கொள்ளை அடிக்கப்பட்டன. பொலிவிழந்து காண்ப்பட்ட இரணியல் அரண்மனையை, பழமை மாறாமல் புனரமைத்து தர வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, இரணியல் அரண்மனை ரூ.4.85 கோடியில் புனரமைக்கப்பட்டு வருகிறது. செங்கல் கட்டுமானத்தின்போது கடந்தகாலத்தில் சிமெண்டிற்கு பதிலாக பயன்படுத்திய சுண்ணாம்பு, கடுக்காய், கருக்கட்டி போன்ற கலவைகளை பயன்படுத்தப்பட்டது. அரண்மனை முழுவதும் உள்ள மரவேலைகள் தேக்குமரத்தால் செய்யப்பட்டுள்ளது.
அரண்மனையில் சுவர்கள் கட்டிமுடிக்கப்பட்டு, மேல்கூரை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பின்னர் அதன்மேல் அலுமினிய ஷீட்டுகள் போடப்பட்டு, அதன்மேல் மரப்பணிகள் முடிந்துள்ளது. அரண்மனை சிதலம் அடைவதற்கு முன்பு இருந்த ஓடுகளை மாதிரியாக கொண்டு கேரள மாநிலம் திருச்சூரில் அதேபோன்று ஓடுகள் தயாரிக்க இந்து சமய அறநிலையத்துறை ஒப்பந்தம் செய்தது. அதன்படி ஓடுகள் தயாரித்து கொடுத்துள்ளனர்.
மொத்தம் 85 ஆயிரம் ஓடுகள் இரணியல் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஓடுகள் போடும் பணி இன்னும் இருதினங்களில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அரண்மனை பழமைமாறாமல் செய்யப்பட்டு வரும் புனரமைப்பு பணி இந்த வருடத்திற்குள் முடிக்கப்படும் என அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.
The post புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்; இரணியல் அரண்மனைக்கு திருச்சூரில் இருந்து வந்த ஓடுகள்: இந்த வருடத்திற்குள் பணியை முடிக்க திட்டம் appeared first on Dinakaran.