மும்பை நகரில் ‘கபூதர் கானா’ என்று சொல்லப்படும் புறாக்களுக்கு உணவளிக்கப்படும் இடங்களை மூடும்படி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பறவை ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனது உறவினர் ஒருவர் புறாக்களின் மூலம் பரவும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை மகாராஷ்டிர மாநில அரசு எடுத்துள்ளது. மும்பையில் நீண்ட நெடுங்காலமாகவே புறாக்கள் அதிகம் வசிக்கின்றன. அவை அங்குள்ள மக்களின் வரலாறு மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடைய பறவையாக இருந்து வருகிறது.
தாதர், கடற்கரை சாலை, கிர்காம் சவுபதி,கேட்வே ஆப் இந்தியா, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட 51 இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 3,000 முதல் 4,000 புறாக்கள் பொதுமக்கள் அளிக்கும் தானியங்களை உண்பதற்காக இங்கு வருகின்றன. இந்த இடங்களை திடீரென மூட உத்தரவிடுவது வாயில்லா பறவைகள் மீது திடீரென போர் தொடுப்பதைப் போன்ற நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.