புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களுடன் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மியான்மர் பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவி வழங்குவதற்கான முன்முயற்சியான ‘ஆபரேஷன் பிரம்மா’வை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்: பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரின் தலைமை ஜெனரல் மின் ஆங் ஹிலேங்குடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார். இந்தச் சவாலான நேரத்தில் மியான்மருடன் ஒற்றுமையுடன் நிற்பதற்கு நெருங்கிய நட்பு மற்றும் அண்டை நாடு என்ற முறையில் இந்தியாவின் திடமான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் தெரிவித்தார். இந்தப் பேரிடரைச் சமாளிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவி வழங்குவதற்கான முன்முயற்சியான ஆபரேஷன் பிரம்மாவை இந்திய அரசு தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.