சென்னை: பூவிருந்தவல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க தமிழ்நாடு அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள திட்டஅறிக்கையில் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ இரயில் நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்டஅறிக்கை (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் மருத்துவர். கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான மு.அ.சித்திக், இ.ஆ.ப., இன்று(11.03.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், நிதிஇயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொது மேலாளர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு). டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், இணைப் பொது மேலாளர் (வணிக மேம்பாடு) ஆர்.நரேந்திரகுமார் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு பூந்தமல்லியில் இருந்து தொடங்கி, செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாகச் சென்று பரந்தூர் விமானநிலையத்தில் முடிவடைகிறது, இது குத்தம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் முன்மொழியப்பட்ட பசுமைவெளி விமான நிலையத்திற்கு தடையற்ற இணைப்பை வழங்கும். திட்ட செலவு மற்றும் செயல்படுத்தல் நேரத்தை மேம்படுத்துவதற்காக, பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் இடையேயான 5.892 கி.மீ நீளத்திற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (National Highways Authority of India – NHAI) முன்மொழியப்பட்ட உயர்த்தப்பட்ட வழித்தடத்துடன் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. திட்ட விவரங்கள்பின்வருமாறு:
* வழித்தடத்தின் மொத்த நீளம்: 52.94 கி.மீ
* உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 20
* மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 15,906 கோடி.
திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை கட்டம்-1 இன் கீழ்செயல்படுத்த ஆலோசகர் பரிந்துரைத்துள்ளார், மேலும் அதன் விவரங்கள் பின்வருமாறு:
* வழித்தடத்தின் மொத்த நீளம்: 27.90 கி.மீ
* உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 14
* மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 8,779 கோடி. (மேலே உள்ள மதிப்பிடப்பட்ட செலவில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உயர்த்தப்பட்டநடைபாதை ஒருங்கிணைப்பு செலவு சேர்க்கப்படவில்லை.) இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பூந்தமல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிப்பு..!! appeared first on Dinakaran.