மதுரை: பூனை கடித்து ரேபிஸ் நோய் பாதிப்பிற்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த வாலிபர், மதுரை அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை, அவனியாபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் ஆனந்தன் – விஜயலெட்சுமி. இவர்களது மூத்த மகன் பாலமுருகன்(25). கல்லூரி படிப்பை முடித்து, கிடைத்த வேலையை செய்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர், வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென 2 பூனைகள் சண்டையிட்டபடி பாலமுருகன் மீது விழுந்தது.
அதில் ஒரு பூனை பாலமுருகனின் தொடையை கடித்ததில் காயம் ஏற்பட்டது. இதற்கான உரிய சிகிச்சை எடுக்காமல் காயத்துக்கான டிடி ஊசி மட்டும் செலுத்திக் கொண்டு வேலைக்கு சென்று வந்தார். மேலும், உடல்நலம் பாதித்த தந்தைக்கும் உதவியாக இருந்து வந்தார். வீட்டில் இவருக்கு பெண் பார்த்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு பின் அடிக்கடி கடும் தலைவலி வருவதாக பாலமுருகன் பெற்றோரிடம் கூறியுள்ளார். கடந்த வாரம் வலி அதிகரித்த நிலையில், மாத்திரையை விழுங்க கொடுத்த தண்ணீரை ஒருவித பயத்துடன் பார்த்துள்ளார். வேகமாக காற்று வீசினாலும் அச்சத்துடன் இருந்துள்ளார்.
இவரது நடவடிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் பாலமுருகனுக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரேபிஸ் நோய் சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சைக்கு பயந்து தப்பி ஓட பாலமுருகன் முயன்றார். இருப்பினும் அவரை குடும்பத்தினர் பிடித்து, மீண்டும் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
உடல் வலி மற்றும் மன உளைச்சலால் புலம்பியபடி அறைக்குள்ளேயே அங்குமிங்கும் ஓடியபடி இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அதிக குளிர் அடிப்பதாக கூறி போர்வை கேட்டுள்ளார். நேற்று அதிகாலை அறைக்கதவின் மேல் போர்வையால் கட்டி தொங்கியபடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பூனைக்கடியால் ரேபிஸ் பாதிப்பு; மதுரை அரசு மருத்துவமனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான தகவல்கள் appeared first on Dinakaran.