ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழாவை நடத்துவதில் தீவிரமாக இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். ஆனால், அன்புமணியை ஒதுக்கிவைத்துவிட்டு அய்யா நடத்தும் இந்த மாநாட்டால் பாமக-வுக்குள் பூகம்பம் வெடிக்கலாம் என பதறுகிறார்கள் பாட்டாளி சொந்தங்கள்.
பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வெடித்துள்ள உரிமை மோதல் பிரச்சினையானது நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வரும் நிலையில், மகனைப் புறக்கணித்துவிட்டு பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழாவை நடத்த ஆயத்தமாகி வருகிறார் ராமதாஸ். கடந்த 20 ஆண்டுகளாக அன்புமணி இல்லாமல் எந்த நிகழ்ச்சியையும் நடத்திப் பழக்கமில்லாத ராமதாஸ், முதல்முறையாக மகனின் தயவில்லாமல் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார். இந்த மாநாட்டில் 3 லட்சம் மகளிர் பங்கேற்க வேண்டும் என்பது அய்யாவின் அன்புக்கட்டளை என்கிறார்கள்.