பெங்களூரு: பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக கர்நாடக சுகாதார துறை விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (எச்எம்பிவி) வேகமாக பரவி வருகிறது. இதனை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், இப்போதைக்கு இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் 8 மாத கைக்குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாநில சுகாதாரத் துறை வட்டாரம், ”8 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று ஏற்பட்டதாக தனியார் மருத்துவமனை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையின் நோய் கண்டறிவதற்கான ரத்த / சளி மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படவில்லை. அதேவேளையில் தனியார் மருத்துவமனையின் சோதனை முடிவுகளை தாங்கள் சந்தேகிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவும் எச்எம்பிவி வைரஸ் பற்றிய முழுமையான தரவுகள் நமக்கு இல்லை. அதனால் இப்போது பரிசோதிக்கப்பட்ட மாதிரியை ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் மாதிரியானவையா என்று சொல்ல இயலவில்லை” எனத் தெரிவித்துள்ளது.