பல்வேறு காரணங்களுக்காக வெளி மாநிலங்களில் இயங்கி வரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டு இருக்கும் நிலையில், பெங்களூர் நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது கேரள நிறுவனம் ஒன்று தனது கேரள வர்த்தகத்தை மொத்தமாக மூடிவிட்டு தமிழ்நாட்டில் வர்த்தகத் தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
இது தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட் ஆக இருந்தாலும், கேரளாவுக்குப் பெரும் பிரச்சனையாக விளங்குகிறது.
தமிழ்நாடு அரசு
புதிய முதலீட்டை ஈர்க்கவும், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்து வருகிறது. இதனால் பல வெளி மாநில நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் தமிழ்நாட்டில் தொழில் துவங்கத் திட்டமிட்டுப் பிற மாநிலங்களில் இருந்து வெளியேறி வருகிறது.
கர்நாடக மாநிலம்
குறிப்பாகக் கர்நாடக மாநிலத்தில் இருந்து சமீபத்தில் அதிகளவிலான நிறுவனங்கள் வெளியேறி தமிழ்நாட்டில் தொழில் துவங்கியது. அதிலும் முக்கியமாக ஸ்டார்ட்அ பிரிவில் அதிகளவிலான நிறுவனங்களையும், முதலீடுகளையும் ஈர்த்தது வருகிறது. இந்தியா ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் கோட்டையாகப் பெங்களூர் விளங்குகிறது.
பசவராஜ் பொம்மை
சமீபத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் வகுப்புவாத பிளவைக் காரணம் காட்டி, கர்நாடகாவில் இருக்கும் தொழில் நிறுவனங்களைத் தமிழக மற்றும் தெலுங்கானா ஈர்த்து வருவதைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தற்போது கேளர நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது.
அர்ஜூனா நேச்சுரல்
கேரளாவில் இயங்கி வரும் அர்ஜூனா நேச்சுரல் நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெர்பல் ஸ்பைஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தைச் சுமார் 250 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
சங் பரிவார்
இந்நிலையில் இந்நிறுவனத்தில் சங் பரிவார் அமைப்பின் கிளை ஊழியர்கள் அமைப்பான BMS நிர்வாக எதிராக நடத்தி வரும் போராட்டத்தின் காரணமாகவும், பிரச்சனையைச் சமாளிக்க முடியாத காரணத்திற்காகவும் தற்போது கேரளாவில் தனது வர்த்தகத் தளத்தை மூடிவிட்டுத் தமிழ்நாட்டில் தொழில் துவங்க முடிவு செய்துள்ளது.
கோவை அர்ஜூனா நேச்சுரல் நிறுவனம்
ஏற்கனவே கோவை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதியில் இரு பெரிய பேக்டரியை வைத்துள்ள நிலையில் தற்போது மொத்த வர்த்தகத்தையும் தமிழ்நாட்டுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. தற்போது அர்ஜூனா நேச்சுரல் நிர்வாகக் குழு மற்றும் BMS அமைப்பும் கேரள அரசுடன் ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளது.