தாம்பரம்: தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சிட்லபாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், செம்பாக்கம் சுற்றுவட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளிலும், போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
குரோம்பேட்டை அருகே உள்ள பான்ஸ் மேம்பாலம் கீழ் ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் தேங்கி நின்று கடல் போல் காட்சி அளிக்கிறறது. இதில் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. பெரும்பாலான வாகனங்கள் தேங்கி நிற்கும் மழைநீரில் சிக்கி பழுதாகி நின்றுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.தொடர்ந்து ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளில் சுமார் 2500க்கும் மேற்பட்ட தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டல குழு தலைவர் டி.காமராஜ் உள்ளிட்டோர் அந்தந்த பகுதிகளில் கொட்டும் மழையிலும் நேரில் சென்று மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றவும், மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post பெஞ்சல் புயலால் பெய்யும் கனமழை தாம்பரம்-பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கடல்போல் தேங்கிய மழைநீர் appeared first on Dinakaran.