சென்னை: பெஞ்சல் புயலின் காரணமாக சேதத்திற்குள்ளான கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்கவும், பேரிடருக்கு பிந்தைய சேத மதிப்பீடு குறித்த ஆய்வை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 வல்லுநர்களையும், தமிழ்நாடு அரசின் பல்துறை அலுவலர்களை கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பின்னர் இக்குழு 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் பெஞ்சல் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்கும் நோக்கில் நேரில் சென்று மதிப்பீடு செய்தது. ஏற்கனவே, பெஞ்சல் புயலின் காரணமாக ஏற்பட்ட தற்காலிக சேதங்களை மதிப்பீடு செய்ய ஒன்றிய அரசின் பல்துறை குழுவானது கடந்த டிசம்பர் மாதம் ஆய்வை மேற்கொண்டது.
பெஞ்சல் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் ரூ.3,104 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு ரூ.3,681 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பேரிடருக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்பு பணிக்கான சேத மதிப்பீடு குழுவுடன் சென்னை, எழிலகத்தில் கலந்தாலோசித்தார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 வல்லுநர்களையும், தமிழ்நாடு அரசின் பல்துறை அலுவலர்களையும் அறிக்கையினை விரைந்து சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, பேரிடர் மேலாண்மை இயக்குநர் மோகனச்சந்திரன் மற்றும் பல்துறை சார்ந்த அலுவலர்களும் உடன் இருந்தனர்.
The post பெஞ்சல் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்க ரூ.3,681 கோடி ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை appeared first on Dinakaran.