சென்னை: நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த 1ம் தேதி இரவு ஏற்பட்ட பெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அண்டம்பள்ளம் மின்மாற்றியில் மின்தடை ஏற்பட்டது. மின்தடையை சரிசெய்யும் பணிக்காக வெறையூர் பிரிவில் இருந்து சென்ற மின்பாதை ஆய்வாளர் பி.பாலசுந்தர் (56) மற்றும் கம்மியர் பி.அண்ணாமலை (56) ஆகிய இருவரில் பி.அண்ணாமலை பவித்திரம் தரைப்பாலத்தை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.
தொடர்ந்து அவரை தேடியதில் நேற்று முன்தினம் (3ம் தேதி) பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மின்சார வாரிய ஊழியர் அண்ணாமலை உயிரிழப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும், உயிரிழந்த அண்ணாமலை குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பெஞ்சல் புயல் காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்: ஒருவருக்கு அரசு பணி ; முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.