சென்னை: வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. நேற்று மாலை மழை ஓரளவிறகு விட்டிருந்ததால் மழைநீரை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் சென்றனர். உதவி பொறியாளர் பாலமுரளி தலைமையில் மழைநீரை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொளத்தூர் திருப்பதி நகர் வெங்கடேஸ்வரா காலனி பகுதியைச் சேர்ந்த இசைவாணன் (24) என்ற தற்காலிக மின்வாரிய ஊழியர் மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியந்தோப்பு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதையடுத்து புளியந்தோப்பு போலீசார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேளச்சேரி: வேளச்சேரி ராம் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (45), குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை வீட்டுக்கு விஜய நகர், 2வது மெயின் ரோடு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புயல் காரணமாக பலத்த காற்று வீசியது. திடீரென உயர்மின் அழுத்த கம்பி, அறுந்து சக்திவேல் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே சக்திவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு சென்று சக்திவேல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டையார்பேட்டை: உ.பி.யைச் சேர்ந்தவர் சந்தன் (21), இவர் மண்ணடி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். நேற்று மண்ணடி பிரகாசம் சாலையில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏடிஎம் மையத்தின் வெளியே தண்ணீர் தேங்கி நின்றது.
அதை தாண்டி ஏடிஎம் மையத்துக்குள் செல்ல அருகில் இருந்த தடுப்பு கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ரூ.5 லட்சம் நிதியுதவி: வேளச்சேரி விஜயநகரில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்த சக்திவேல் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
The post பெஞ்சல் புயல், மழைக்கு சென்னையில் ஒரே நாளில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி appeared first on Dinakaran.