புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரியை உயர்த்தியதன் மூலம் அரசு பொதுமக்களைக் கொள்ளையடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை விமர்சித்துள்ளது. மேலும், அரசு கொள்கைகள் எவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு பயனளித்தன என்று மத்திய தணிக்கைக் குழு (சிஏஜி) ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும், இதில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டப்பட்டதா, கூட்டுச்சதி ஏதும் உள்ளதா என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மத்திய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள் சுரண்டப்படுகிறார்கள். ஒருபுறம் மோடி அரசு வரிச்சுமையை அதிகரித்து மக்களைச் சுரண்டுகிறது என்றால் மறுபுறம், அரசும் எண்ணெய் நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. இது வெளிப்படையான ஒரு பொருளாதாரச் சுரண்டல்.