தினசரி வேலைச் சுமைக்கு இடையே ஓய்வு, ஊடகங்கள், விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஆண்களைவிடப் பெண்கள் 21 நிமிடங்கள் குறைவாகச் செலவிடுவதாகவும், பல நேரம் இந்த இடைவெளி கூடுதலாக இருப்பதாகவும் இந்தியாவின் தேசியப் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டிருக்கும் ‘நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பு – 2024’ அறிக்கை தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஓய்வு எடுத்துக்கொள்ளாமல் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் பெண்கள் ஈடுபடுவது, அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன? – பெண்கள், ஒவ்வொரு நாளும் குடும்ப உறுப்பினர்களுக்காகச் செய்கிற ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளுடன் ஒப்பிட்டால், செய்திகளை அறிந்துகொள்வதற்குக் குறைவான நேரத்தையே செலவிடுகிறார்கள் என்கின்றன, இந்தப் புள்ளிவிவரங்கள். வருமானம் இல்லாத வேலைகளில் பெண்கள் 289 நிமிடங்கள் செலவிட்டால், ஆண்கள் 88 நிமிடங்கள் மட்டுமே செலவிடுவதாகத் தெரியவந்திருக்கிறது.