சென்னை: பெண்களுக்காக வழங்கப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் உதவி எண்களுடன், ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவையை தமிழக அரசு கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தினை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக 165 பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்களை வழங்கினார்.
குறிப்பாக ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் இந்த ஆட்டோக்கள் பெண்களுக்கு வழங்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. இந்த நிலையில் சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை சில ஆண்கள் தங்களின் வணிக ரீதியிலான போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து சமூகநலத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மாநகரில் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோவை ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உடல் நல குறைவு காரணமாக பெண் பயனாளிகள் ஆட்டோக்களை ஓட்டாத நாட்களில் அவர்களது கணவர் அல்லது உறவினர்கள் ஓட்டியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆட்டோக்கள் அவர்கள் தான் ஓட்ட வேண்டும் என்ற விதிஇருப்பதால், இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று மீறி ஆண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஓட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடல் நலக்குறைவு காரணமாக பெண் பயனாளிகள் ஆட்டோக்களை ஓட்டாத நாட்களில் அவர்களது கணவர் அல்லது உறவினர்கள் ஓட்டியது தெரியவந்துள்ளது.
The post பெண்களுக்காக வழங்கப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை: சமூக நலத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.