சென்னை: பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை 2026-ல் நாம் அனைவரும் சேர்ந்து மாற்றுவோம் என மகளிர் தினமான நேற்று தவெக தலைவர் விஜய் உறுதியேற்றார். முன்னதாக, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
தவெக தலைவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள எனது அம்மா, அக்கா, தங்கை, தோழி என அத்தனை பேருக்கும் மகளிர் தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம் தானே? பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, எந்த சந்தோஷமும் இருக்காது தானே? என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.