கோவை: பெண்கள் பாதுகாப்பிற்காக முதல் முறையாக பஸ் நிறுத்தங்களில் கேமரா மற்றும் போலீசாருடன் பேச மைக் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை மகளிர் தினத்தில் தொடங்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். கோவை மாநகர போலீசார், பெண்கள் பாதுகாப்பிற்கு ‘போலீஸ் அக்கா’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள் பாதுகாப்பிற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கருத்துக்களை தெரிவிக்க கியூஆர் கோட்டை போலீசார் அறிமுகம் செய்தனர். அதில் பல பெண்கள், மாணவிகள் பஸ் நிறுத்தங்கள் மற்றும் பஸ்களில் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் முதன்முறையாக பஸ் நிறுத்தங்களில் கேமரா மற்றும் ஆபத்து நேரங்களில் போலீசாருடன் தொடர்புகொள்ள பைக் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய உள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாணவிகள், பெண்கள் இரவு நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் நிற்கும்போது தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கியூஆர் கோடு மூலம் அதிகளவில் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து மாநகரில் உள்ள பஸ் நிறுத்தங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதில் 350 பஸ் நிறுத்தங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பஸ் நிறுத்தங்களில் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 250 பஸ் நிறுத்தங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த கேமராக்கள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பார்கள். கேமரா மட்டும் இல்லாமல் பஸ் நிறுத்தங்களில் உள்ள தூண்களில் மைக்கும் பொருத்தப்பட உள்ளது. பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டால் உடனே அந்த மைக்கில் போலீசாருடன் தொடர்பு கொள்ளலாம், பதிலுக்கு போலீசாரும் பேசுவார்கள்.
தொடர்ந்து போலீசார் சில நிமிடங்களில் சம்பவ இடங்களுக்கு வந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். முதல் பஸ்நிறுத்தமாக காந்திபுரம் மகளிர் பாலிடெக்னிக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் மகளிர் தினமான நாளை (8ம் தேதி) தொடங்கி வைக்கிறார். அதேபோல அன்று 181 மகளிர் உதவி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. தாமஸ் கிளப், லட்சுமி மில், வஉசி ஆகிய இடங்களில் இருந்து மகளிர் பேரணியும் நடத்தப்படுகிறது. பஸ்களில் கேமராக்கள் பொருத்த பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பெண்கள் பாதுகாப்பிற்கு முதல் முறையாக கோவை பஸ் ஸ்டாப்களில் கேமரா, போலீசாருடன் பேச மைக் appeared first on Dinakaran.