சென்னை: பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2025-2026ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், மகளிருக்கு சம சொத்துரிமை வழங்கிடும் சட்டத்தை கடந்த 1989ம் ஆண்டு நிறைவேற்றிய கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிநடை பயின்றிடும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்ச் சமூகத்தில் மகளிருக்கான உயர் இடத்தையும், உரிய அதிகாரத்தையும் உறுதி செய்திடும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சமூகத்தில் மட்டுமன்றி, அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் 1ம் தேதி முதல், ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும்.
இதன் மூலம், மகளிரின் சுயசார்பும் பொருளாதாரச் சுதந்திரமும் மேலும் உயர்ந்திடும் என்று இந்த அரசு நம்புகிறது என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை படி, ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான அசையா சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
The post பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.