சென்னை: பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது திமுக அரசு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; ஒரு ஆணுக்கு என்னென்ன உரிமை இருக்கோ அது எல்லாம் பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்று சொன்னவர் பெரியார்.
இதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. தந்தை பெரியாரின் வழியிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காக முன்னுரிமை கொடுத்து வருகிறார். பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மகளிருக்கென பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.15 கோடி பேருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று நோக்குகிறது.
ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சிதான் திராவிட மாடல் அரசின் வெற்றி. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வெற்றி பெற்றதற்குக் காரணம் மகளிர் சுய உதவிக் குழுக்கள்தான். கோரிக்கை வைத்து 6 மணி நேரத்தில், மகளிருக்கான வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினோம் என்று கூறினார்.
The post பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது திமுக அரசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.