ஊட்டி : பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் கள பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் மற்றும் வாழ்க்கை சூழலின் மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளை களைவதற்கான மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ‘‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’’ திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 180 மாணவியர்கள் கள பயணம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்களப் பயணம் செல்லும் வாகனத்தினை ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதன்படி குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்டல் மையத்திலுள்ள கண்காட்சி மற்றும் ராணுவ பயிற்சி மையம், தமிழ்நாடு ஆயுதப்படை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், எமரால்டு மற்றும் பைக்காரா அணை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக களப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வாழ்க்கை சூழலையும், பல்வேறு துறைச் சார்ந்த அறிவை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் பலர் உடனிருந்தனர்.
The post பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் அரசு பள்ளி மாணவிகள் கள பயணம் appeared first on Dinakaran.