சென்னை: பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் படி, பாரத இந்து மக்கள் அமைப்பின் துணை தலைவர் மாயாஜி என்பவர் மீது போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், வழக்கு தொடர்பாக பாரத இந்து மக்கள் அமைப்பின் துணை தலைவர் சுந்தரம் (எ) மாயாஜி (47) என்பவர் தன்னை அணுகியதாகவும், அதன் பிறகு அவர் மீது உள்ள வழக்குகளை பார்த்த போது, தன்னிடம் தவறான நோக்கத்தில் மாயாஜி பழகி வந்ததும், அதுகுறித்து பல முறை கண்டித்தும் அவர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகிறார். இதை பல முறை கண்டித்த போது, பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் வழக்கறிஞர் புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் படி கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுந்தரம் (எ) மாயாஜி திட்டமிட்டு பெண் வழக்கறிஞரிடம் தவறான நோக்கத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது புகார் உடன் அளித்த ஆவணங்கள் மூலம் உறுதியானது. அதைத் தொடர்ந்து பாரத இந்து மக்கள் அமைப்பின் துறை தலைவர் சுந்தரம் (எ) மாயாஜி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
The post பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு; பாரத இந்து மக்கள் அமைப்பின் துணை தலைவர் மாயாஜி கைது: பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை appeared first on Dinakaran.