தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ‘பெப்சி’க்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெப்சி அமைப்பு, நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் ‘பெப்சி’ க்கு எதிராக புதிய திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி என் ராமசாமி, பொதுச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் கூறியதாவது: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. எங்கள் சங்கமும் பெப்சி அமைப்பும் சுமார் 50 வருடங்களாகத் தொழில் ஒத்துழைப்பில் ஈடுபட்டு வந்தோம். சில காரணங்களால் அவர்கள் எங்கள் சங்கத்துக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறி நடப்புத் தயாரிப்பு சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் அதற்கு உடன்படவில்லை.