கோவை: தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் குடும்ப அட்டை முக்கிய ஆவணமாகும். நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு மட்டுமின்றி, அரசு வழங்கும் நிதியுதவி பெறுவதற்கும் இந்த அட்டை முக்கியமானதாகும். இந்நிலையில், குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக நடத்தப்படும் முகாம்கள் பெயரளவுக்கு மட்டுமே நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு கூறியதாவது: மாவட்ட வழங்கல் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் செய்தல், செல்போன் எண் மாற்றுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான சேவைகள் நடைபெறுவதில்லை.