தேனி: பெரியகுளம் அருகே தேனி செல்லும் சாலையில் சருத்துப்பட்டி பிரிவில் உள்ள பாறைக்கண்மாயை கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தூர்வாரும் பணி நிறைவடைந்தது. பெரியகுளம் அருகே தேனி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சருத்துப்பட்டி பிரிவு உள்ளது. சருத்துப்பட்டி பிரிவில் அருள்மிகு கருப்பசாமி, பட்டாளம்மன், பேச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் எதிர்புறம் பாறைக்கண்மாய் உள்ளது. சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கண்மாயில் மழைகாலத்தில் பெய்யும் நீரை ஆதாரமாக கொண்டு இக்கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் தேங்கும் நீரின் மூலம் சருத்தப்பட்டி கிராம மக்களின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது. மேலும், இக்கண்மாயில் இருந்து வெளியேறும் நீரினைக் கொண்டு சுமார் 100 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில், இக்கண்மாயில் சேறுஅதிகரித்து மண்குவியலாகி நீர் தேங்காமல் சாக்கடை கழிவு நீர் தேங்கியதால் சுகாதாரக்கேடாக மாறியது. இதனால், சருத்துப்பட்டி கிராம திமுக கிளை செயலாளர் உதயசூரியன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர் காளிதாஸ் ஆகியோர் தனியார் தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து, சருத்துப்பட்டி கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தற்போது பாறைக் கண்மாயில் நிரம்பியுள்ள சேறு, சகதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியை துவக்கினர். இப்பணி சுமார் ஒரு மாத காலம் நடந்து முடிந்த நிலையில் தற்போது பாறைக் கண்மாய் முழுமையாக தூர்வாரப்பட்டு, சுற்றிலும் கரைப்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உதயசூரியன் கூறியதாவது, சருத்துப்பட்டி பிரிவில் கருப்பசாமி, பட்டாளம்மன், பேச்சியம்மன் கோயில் எதிர்புறம் உள்ள கண்மாயை தூர்வாரி சுத்தப்படுத்தி, சுற்றிலும் கரையை பலப்படுத்தி கண்மாயில் நீரை தேக்க முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, அசுத்தம் நிறைந்த கண்மாயை தூர்வாரி சுத்தப்படுத்த மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரான முத்துமாதவன் ஆதரவுடன் அதிகாரிகள் ஆதரவைப் பெற்று ரூ.5 லட்சம் மதிப்பீட்டில், இக்கண்மாயை தூர்வாறி கரையை பலப்படுத்திட கிராம மக்களின் ஒத்துழைப்புடன் பணிகள் மேற்கொண்டு தற்போது பணியை நிறைவு செய்துள்ளோம். கண்மாயின் மையப்பகுதியில் ஆங்காங்கே பாறைகள் உள்ளதால் அதனை ஒன்றும் செய்யமுடியவில்லை. மாவட்ட நிர்வாகத்தில் கோரிக்கை வைத்து, இந்த கண்மாயின் நடுவே உள்ள பாறையை வெடிவைத்து தகர்த்தி கண்மாயை முழுமையாக தேக்க முயற்சித்து வருகிறோம்’’என்றார். தற்போது இக்கண்மாய் முழுமையாக தூர்வாறப்பட்டதால் காண்போர் வியக்கும் வகையில் உள்ளது.
The post பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியில் மக்கள் ஒத்துழைப்புடன் தூர்வாரப்பட்ட பாறைக்கண்மாய் appeared first on Dinakaran.