பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த, வடமதுரை ஊராட்சி, மதுரா பேட்டைமேடு கிராமத்தில் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ ராதாகிருஷ்ண சாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர்களால் புனரமைக்கப்பட்டு, நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனைதொடர்ந்து, நேற்று காலை விஸ்வரூபம், புண்ணியாவஜனம், கலச பூஜை, ஹோமம் மஹாபூர்ணஹூதி, யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இதன் பின்னர், பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் வந்திருந்த வேதா விற்பனர்கள் மங்கள வாத்தியம் முழங்க புனிதநீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். காலை 10 மணிக்கு விமான கோபுரம், பெருமாள் உள்ளிட்டவற்றிற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர், விழாவில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், கோயில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இரவு பூக்களாலும், மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமி மங்கள வாத்தியம் முழங்க, வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ரவிக்குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சிவாஜி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவைச் சேர்ந்த அம்மினிமகேந்திரன், ஜமுனாஅப்பன், செல்வம், சீனிவாசன், கருணா, நாகப்பன், ஜெகதீசன், ஆறுமுகம், கோபி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் பொன்னேரி அடுத்த, பொன்நகரில் அமைந்துள்ள மகாகணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. யாக கலச பூஜைகளுடன் கலச நீர் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மகா கணபதிக்கும் கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், ஸ்ரீ மகாவிஷ்ணு வைத்தீஸ்வரர் ஸ்ரீ பாலமுருகன் ஐயப்பன் சாய்பாபா கால பைரவர் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகளுக்கும் கலச நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில், பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மகா கணபதியின் அருளை பெற்று சென்றனர்.
The post பெரியபாளையம், பொன்னேரி கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.