ஈரோடு: திமுகவைச் சேர்ந்த அண்ணா, கருணாநிதியை விட, பெரியாரை வேறு யாரும் அவதூறாகப் பேசியதில்லை, என சீமான் தெரிவித்தார். ஈரோடு பவானி சாலையில் உள்ள பெருமாள் மலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் 60 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மக்கள், பட்டா கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அவர்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பெருமாள்மலையில் வசிக்கும் மக்களை காலி செய்யவோ, வாடகை கேட்டு கட்டாயப் படுத்தினாலோ தொடர்ந்து இங்கேயே இருந்து போராடுவேன். இப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.