சென்னை: தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் சென்னை தி.நகர் தெற்கு போக் ரோட்டில் நேற்று நடந்தது. விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொங்கலிட்டு, காங்கிரஸ் கட்சியினர் 1000 பேருக்கு வேஷ்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெரியாரை விமர்சிக்கும் போது அதிமுக ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாஜவை கண்டிக்க மாட்டார்கள். பாஜவினுடைய செயல் திட்டங்களை சீமான் நடைமுறைப்படுத்துகிறார். பாஜவினுடைய ஊன்றுகோலாக சீமான் இருக்கிறார்.
அதிமுக ஏன் மவுனமாக இருக்க வேண்டும். பெரியாரை விமர்சனம் செய்துவிட்டு, ஈரோட்டில் எப்படி வாக்கு சேகரிக்க முடியும். எதிர்வினையை சீமான் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர்கள் இல.பாஸ்கரன், டி.செல்வம், தணிக்காசலம், எஸ்.ஏ.வாசு, அமைப்பு செயலாளர் ராம் மோகன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட பொறுப்பாளர்கள் கே.விஜயன், ஜோதி, இமயா கக்கன், ஏ.ஆர்.எஸ்.எம்.அப்துல் காதர், தமிழ்வாணன், வில்லிவாக்கம் சுரேஷ், யுவராஜ், பொருளாளர் ஜார்ஜ், தலைமை நிலையச் செயலாளர் மன்சூர் அலிகான், சுசீலா கோபாலகிருஷ்ணன், ஏ.வி.எம்.ஷெரீப், தனசேகரன், பகுதி தலைவர்கள் ஏழுமலை, பாபு, முத்தமிழ் மன்னன், கிண்டி கணேஷ், கோகுலகிருஷ்ணன், ராஜமாணிக்கம், ராஜபாண்டி மற்றும் இல பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பெரியாரை விமர்சித்து விட்டு ஈரோட்டில் சீமான் எப்படி வாக்கு சேகரிக்க முடியும்?: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.