மதுரை: பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியது சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளதாக கூறியுள்ள ஐகோர்ட் கிளை, புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வீ.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 9ம் தேதி பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பேசியுள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. பெரியார் குறித்து தவறான கருத்துக்களை திணிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்.
இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து நான் மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தேன். எனது புகாரை ஏற்று சீமான் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ‘‘சீமான் தெரிவித்த கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மனுதாரரின் புகார் மனுவின் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜன. 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
The post பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு: அவரது கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது என கருத்து appeared first on Dinakaran.