புதுச்சேரி: பெரியார் பற்றி சீமான் தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கோரி அவரை சந்திக்க புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் மறியலில் ஈடுபட்டு நாம் தமிழர் கட்சி கொடிகளை பிய்த்து எறிந்தனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் வந்ததால் தகராறு ஏற்படும் சூழல் உருவானது. இருதரப்பையும் போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரியில் இன்று லெனின் வீதியிலுள்ள திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இதில் சீமான் பங்கேற்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கோரி அவரை சந்திக்க நெல்லித்தோப்பு சிக்னலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் குவிந்தனர். அதையடுத்து காலை 11 மணிக்கு இந்நிகழ்வில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர் புதுச்சேரியில் வந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.