சென்னை: வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 12ம் தேதி கேரளவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். கேரளா மாநிலம் வைக்கம் என்னும் இடத்தில் பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றதன் நினைவாக தமிழ்நாடு அரசு சார்பில் நினைவகம் உள்ளது. தந்தை பெரியாரின் நினைவிடம் தரைதளம் மற்றும் முதல் தளத்தை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது.
இதில், நூலகம் 2,582 சதுரடி பரப்பளவிலும், அருங்காட்சியகம் 1891 சதுரடி பரப்பளவிலும் அமைந்துள்ளது. தமிழக அரசு சார்பில் ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 28.6.2023 அன்று துவங்கப்பட்ட சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.1891 சதுர அடியில் அமைந்திருந்த அருங்காட்சியகத்தை தரை தளம் மற்றும் முதல் தளம் 3025 சதுர அடியில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழைய நூலக கட்டடத்தினை அகற்றி தரைதளத்தில் புதிய நூலகம் மற்றும் முதல் தளத்தில் தங்கும் அறைகள் 3457 சதுர அடிகளில் கட்டப்பட்டுள்ளது. சிறுவர் பூங்கா மற்றும் திறந்தவெளி அரங்கம் ஆகியவைகளையும் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் கூறியதாவது: கேரளத்தில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை டிசம்பர் 12ம் தேதி காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். கோட்டயத்தில் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைப்பதற்காக டிசம்பர் 11ம் தேதி முதல்வர் கேரளா செல்கிறார். அதனைதொடர்ந்து கோட்டயத்தில் நடைபெற உள்ள வைக்கம் நினைவு மற்றும் பெரியார் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
வரவேற்புரையாற்றுவதற்காக தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னிலை உரை வீரமணி, தலைமை உரையாற்றுவதற்காக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். அதேபோல் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
The post பெரியார் நினைவகம் – நூலகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் 12ம் தேதி கேரள பயணம்: பினராயி விஜயன் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.