சென்னை: பெருங்கழுகுகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு செய்தியில், இயற்கை விவசாயம் மற்றும் கிராமப்புற சூழல்களில் பாரூ கழுகுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக கரிம கழிவுகளை மறு சுழற்சி மூலம் அகற்றுவதில் துப்புரவாளர்களாக பங்கு வகிக்கின்றன. வெண்முதுகு பாரூ கழுகு, நீண்ட மூக்கு பாரூ கழுகு மற்றும் செம்முக பாரூ கழுகு ஆகிய மூன்று வகை பாரூ கழுகுகளின் எண்ணிக்கை கடந்த 30 வருடங்களில் குறைந்து காணப்பட்டதால் அவை அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பாரூ கழுகுகளை பாதுகாப்பதற்காக டைக்ளோஃபெனாக் மற்றும் நிம்சுலைடு ஆகிய கால்நடை மருந்துகளை தடை செய்தது மட்டுமல்லாது வாழ்விடங்களை பாதுகாத்தல் மற்றும் வருடாந்திர பாரூ கழுகளின் எண்ணிக்கையை கண்காணித்தல் போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பாரூ கழுகுகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பை தமிழ்நாடு வனத்துறை முன்னெடுத்து, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநில வனத்துறையுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெல்லை வன உயிரின சரணாலயம், கேரளாவில் வயநாடு வனவிலங்கு சரணாலயம் மற்றும் கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் காப்பகம், பிலிகிரி ரங்கசாமி கோயில் புலிகள் காப்பகம் மற்றும் நாகர்ஹோலே புலிகள் காப்பகம் ஆகிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
நிலப்பரப்பளவில் நடத்தப்படும் மூன்றாவது ஒருங்கிணைந்த பாரூ கழுகுகளின் கணக்கெடுப்பு 2025, பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு காட்சி கோண எண்ணிக்கை முறையில் மூன்று மாநிலங்களிலும் மொத்தம் 106 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் 33 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இக்கணக்கெடுப்பின் தரவுகளை ஆய்வு செய்ததில் இந்நிலப்பரப்பில் மொத்தம் 390 பாரூ கழுகுகள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. 2023-2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பாரூ கழுகுகள் கணக்கெடுப்பில் மொத்தம் 320 என கண்டறியப்பட்டது. இது நிலப்பரப்பில் கழுகுகளின் எண்ணிக்கையில் நிலையாக அதிகரித்து வருவதை குறிக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 157 பாரூ கழுகுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது. இதில் அதிகப்படியாக வெண்முதுகு பாரூ கழுகு 110எண்ணிக்கையாக பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நீண்ட மூக்கு பாரூ கழுகு 31, செம்முக பாரூ கழுகு 11 மற்றும் எகிப்தியன் பாரூ கழுகு 5 எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டது.
பாரூ கழுகுகளின் இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாத இடமாக முதுமலை புலிகள் காப்பகம் திகழ்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் 8 இடங்களில் மொத்தம் 60 கூடுகள் செயலில் உள்ளது காணப்பட்டது. அதில் பாரூ கழுகுகளின் எண்ணிக்கை 120 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வெண்முதுகு பாரூ கழுகு (108) அதனை தொடர்ந்து நீண்ட மூக்கு பாரூ கழுகு (10) மற்றும் செம்முக பாரூ கழுகு (2) உள்ளது. இக்கணக்கெடுப்பின்போது மொத்தம் 34 பாரூ கழுகுகளின் குஞ்சுகள் பதிவு செய்யப்பட்டது.
செம்முக பாரூ கழுகின் கூடு தென்னிந்தியாவில் முதல் முறையாக முதுமலை புலிகள் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.
மதிப்பிடப்பட்டுள்ள பாரூ கழுகுகளின் எண்ணிக்கை காட்சி கோண எண்ணிக்கை முறையில்
தமிழக அரசின் மூத்த அதிகாரிகள், மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினர்கள், தமிழ்நாடு மாநில அளவிலான கழுகு பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள். நிபுணர்கள், கழுகுகள் மற்றும் பறவைகள் குறித்து ஆய்வு செய்யும் தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பறவை ஆர்வலர்கள் கணக்கெடுப்பு நடவடிக்கையில் பங்கேற்றனர்.
முனைவர் க. பொன்முடி, வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் இன்று 04.04.2025 கணக்கெடுப்பு அறிக்கையினை சுப்ரியா சாகு, இ.ஆ.ப., அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை. ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்), ராகேஷ் குமார் டோக்ரா இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் மற்றும் கழுகு குழு உறுப்பினர்கள் ஆகியோரின் முன்னிலையில் வெளியிட்டார்.
The post பெருங்கழுகுகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி..!! appeared first on Dinakaran.