சென்னை: குடும்ப சண்டை காரணமாக பெற்றோர் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதால், மனமுடைந்த 2 மகள்கள் மெரினா கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் உயிருடன் மீட்டனர்.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தலைமை காவலர் குமரேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 இளம்பெண்கள் கடற்கரைக்கு வந்தனர். பிறகு இருவரும் யாரும் இல்லாத பகுதியில் கடலில் இறங்கி தண்ணீரை நோக்கி சென்றனர். இரவு நேரம் என்பதால் குளிப்பதற்கு வாய்ப்பு இல்லை என எண்ணி, தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கவனித்து விரைந்து சென்று, கரைக்கு வரம்படி கூறினர். ஆனால் அவர்கள் கேட்காமல் தண்ணீரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் தலைமை காவலர் குமரேசன் தலைமையிலான போலீசார் கடலில் இறங்கி 2 இளம் பெண்களையும் மீட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த சகோதரிகள் என தெரியவந்தது. இருவரும் தங்களது தாய், தந்தைக்கு அடிக்கடி தகராறு நடந்து வந்ததாகவும், இதனால் இருவரும் நீதிமன்றம் மூலம் முறையாக விவகாரத்து செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தாங்கள் கூறியும் அவர்கள் விவாகரத்தில் உறுதியாக இருந்ததால், எங்களுக்கு வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் மெரினா கடற்கரைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட 2 பெண்களில் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொருவர் கல்லூரியில் படித்து வருகிறார். அதைதொடர்ந்து போலீசார் 2 இளம்ெபண்களிடம் அவர்களின் பெற்றோர் செல்போன் நம்பரை பெற்று அவர்களை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினர். அதன்படி விரைந்து வந்த இளம்பெண்களின் பெற்றோரிடம் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும், இரண்டு பெண்களுக்கும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கே 2 பெண்களுக்கும் டாக்டர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் கவுன்சலிங் அளித்தனர்.
The post பெற்றோர் விவாகரத்து செய்யும் முடிவால் விரக்தி; மெரினாவில் குதித்து 2 மகள்கள் தற்கொலை முயற்சி: ரோந்து போலீசார் விரைந்து மீட்டனர் appeared first on Dinakaran.