கர்நாடக மாநில போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மகாராஷ்டிராவில் நுழைந்தபோது, பயணி ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் கர்நாடக மாநில நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம், இருமாநில மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநில பயணி மராட்டி மொழியில் பேசியதும், நடத்துநர் கன்னட மொழியில் பேசியதும் மோதல் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கர்நாடகா வந்த மகாராஷ்டிர மாநில பேருந்து ஓட்டுநர் ஒருவர் தாக்கப்பட்டதும் மோதல் இருதரப்பிலும் வலுக்க காரணமாக அமைந்துவிட்டது. இருமாநில போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக ரக் ஷனவேதிகே அமைப்பு ‘சலோ பெலகாவி’ போராட்டம் அறிவித்துள்ளது. மராட்டிய அமைப்புகளும் எதிர் கருத்துகளை தெரிவித்து நிலைமையை மோசமடையச் செய்துள்ளன.