சென்னை: நடிப்பு தவிர கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் முன்னணி நடிகர் அஜித் குமார் (53), தமிழில் சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்தது முதல் கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். பெல்ஜியம் சர்க்யூட் டி ஸ்பா ஃபிரான்கோர் சாம்ப்ஸில் நேற்று நடந்த ரேஸில், என்ட்யூரன்ஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்றார். தொடர்ந்து 12 மணி நேரம் நடந்த ரேஸில், அஜித் குமார் உள்பட 3 ஓட்டுநர்கள் மாறி, மாறி காரை இயக்கினர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு நடந்த பயிற்சியின்போது அஜித் குமார் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. ஆனால், அஜித் குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. காரின் முன்பகுதி மட்டுமே சேதமடைந்ததாக அவரது தரப்பில் கூறப்பட்டது. மேலும், இதுபோன்ற கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கி காயம் ஏற்படுவது சகஜமான விஷயம் என்றும் சொல்லப்பட்டது.
ஏற்கனவே ஐரோப்பாவில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்திருந்தது. அப்போது கார் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித் குமார் விபத்தில் சிக்கி காயமின்றி தப்பியிருந்தார். இந்நிலையில், மீண்டும் அவர் ஐரோப்பாவில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள சென்று, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார். இந்த பயிற்சியின்போதும் அவரது கார் விபத்தில் சிக்கியது. தீவிர பயிற்சியில் அஜித் குமார் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வரும் மே 16 முதல் 18ம் தேதி வரை ஜான்வூர்ட் சர்க்யூட்டில் நடக்கும் கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்கிறார்.
தொடர்ந்து மே 24ம் தேதி மிசானோ வேர்ல்ட் சர்க்யூட்டிலும், ஜூன் 26 முதல் 29ம் தேதி வரை ஸ்பா சர்க்யூட்டிலும், ஜூலை 5ம் தேதி சர்க்யூட் பால் ரிக்கார்ட்டிலும், ஜூலை 18 முதல் 20ம் தேதி வரை மிசானோ சர்க்யூட்டிலும், ஆகஸ்ட் 29 முதல் 31ம் தேதி வரை ஜெர்மனி நர்பர்கிங்கிலும், செப்டம்பர் 27ம் தேதி சர்க்யூட் டி பார்சிலோனாவிலும், அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை பார்சிலோனாவிலும் நடக்கும் கார் ரேஸில் அஜித் குமார் பங்கேற்கிறார். இத்துடன் அவர் தனது சீசனை முடிக்கிறார்.
The post பெல்ஜியத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டபோது மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித் குமார் appeared first on Dinakaran.