கடலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறப்போராட்டம் நடந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை குற்றவாளி இல்லை எனச் சொல்லி விடுதலை செய்யவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தியதால்தான் உச்ச நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
ராஜீவ் காந்தியோடு சேர்த்து 9 போலீஸார் உள்ளிட்ட 17 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தலைவர் ராஜீவ் காந்திக்கும் குடும்பம் இருக்கிறது. பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் மனநிலையை நான் நன்கு அறிவேன். அதுபோல அனைவருக்கும் தாய், மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்கள் மனநிலையையும் நாம் பார்க்க வேண்டும்.