சென்னை: பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதாக கூறி ஆளுநர் வெளியேறியது அவமரியாதைக்குரிய செயல் என காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, 2025 ம் ஆண்டின் தமிழ்நாட்டின் முதல் சட்டசபை கூட்ட தொடர் தொடங்கியிருக்கும் சூழலில் சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாகக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென வெளியேறியது அவமரியாதைக்குரிய செயலாகும்.
தமிழகத்தில், சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தை கௌரவிப்பதும், இறுதியில் தேசிய கீதம் இசைப்பதும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையை கடைபிடிக்க ஆளுநர் மறுத்ததன் மூலம், மாநிலத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் உணர்வுகளை அப்பட்டமாக புறக்கணிக்கிறார் என்பது தெரிய வருகிறது.
இந்தச் செயல் தமிழக மக்களுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையைக் குலைக்காதா? இது தமிழ்நாட்டின் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்கும் செயல் இல்லையா? இவ்வாறு நடந்து கொண்டது, மாநிலத்தின் ஜனநாயக விழுமியங்களுக்கு ஆளுநர் எவ்வாறு மதிப்பளிக்கிறார் என்பது குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதாக கூறி ஆளுநர் வெளியேறியது அவமரியாதைக்குரிய செயல்: சசிகாந்த் செந்தில் கண்டனம் appeared first on Dinakaran.