தமிழக சட்டப் பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திருநெல்வேலி நயினார் நாகேந்திரன்(பாஜ) பேசியதாவது:
தலைநகரத்தை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டுமென்ற ஒரு திட்டத்தை எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். அதை மாற்ற முடியுமா?
சபாநாயகர் அப்பாவு: டெல்லியில் உள்ள தலைநகரத்தை சென்னைக்கு கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார்கள்.
நயினார் நாகேந்திரன்: கொண்டு வருவதற்கான வாய்ப்பு வரும்போது பார்க்கலாம். மழைக்கால கூட்டத் தொடரையாவது திருச்சியில் பரீட்சார்த்தமாக நடத்திப் பார்க்கலாம் என்பது, என்னுடைய கருத்து. ஒரு 7 நாள் கூட்டத்தை திருச்சியில் நடத்தினால், அதிகார பரிமாற்றங்கள் எப்படி இருக்கிறது என்பதை அறியலாம். மார்த்தாண்டம்-கருங்கல் இடையே நெடுஞ்சாலை திட்ட பணியை செயல்படுத்த வேண்டும். இதை என் அருகில் இருக்கும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் சொன்னார்கள். (இவ்வாறு அவர் குறிப்பிட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.)
அமைச்சர் எ.வ. வேலு: கிராமச் சாலைகளைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தான் சாலைகளை எடுத்து கொண்டிருக்கிறோம். எனவே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நேரடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடிதம் கொடுத்தால் எடுத்து கொள்ளப்படும்
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: பொதுப் பணித் துறை அமைச்சர், கிராமப்புறங்களில் தேவையில்லாத சாலைகளையெல்லாம் எடுத்தார்கள் என்கிற ஒரு கருத்தை இங்கே சொல்லியிருக்கிறார். அதிமுக ஆட்சி இருந்தபோது, பேருந்து போக்குவரத்து உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமச் சாலைகள்தான் தேர்வு செய்யப்பட்டன. முதன்முதலில் அதிமுக ஆட்சியில் தான் நெடுஞ்சாலைத் துறைக்கு இந்த கிராமப்புற சாலைகளெல்லாம் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
பாஜ உறுப்பினர் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்
பேரவையில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘‘நான் ஆரம்பத்திலேயே முதல்வருக்கு நன்றி சொன்னேன். இன்னும் நிறைய காரியங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். கல்லூரிகள், பாலங்கள் இப்படி எல்லா வகையிலும் நான் கேட்டதையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். முதல்வருக்கு நன்றி சொல்லும்போது எல்லா துறைகளும் அதில் அடங்கிவிடும். அறநிலையத்துறைக்கும் எனது சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவருக்கு பதிலளித்து முதல்வர் பேசுகையில்,‘‘நம்முடைய பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் எல்லாவற்றிக்கும் நன்றி சொன்னதாக சொன்னார். நன்றியை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் அவர் பேசும் போது, ஒவ்வொரு கோரிக்கையாக இருந்தாலும் சரி, செய்து முடித்திருக்கிற காரியங்களாக இருந்தாலும் சரி, அன்போடு, அன்போடு, அன்போடு, அன்போடு தான் என்று சொல்லியிருக்கிறீர்கள். வேண்டுமென்றால், நீங்கள் பேசியதை எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு வார்த்தையையும் முடிக்கும்போது அன்போடு என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அன்போடு நாங்களும் பரிசீலிப்போம்’’ என்றார்.
The post பேரவையை திருச்சியில் நடத்த நயினார் நாகேந்திரன் கோரிக்கை; டெல்லியில் உள்ள தலைநகரத்ைத சென்னைக்கு கொண்டுவர சபாநாயகர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.