சென்னை: “நாடு எதிர் கொள்ளும் பேராபத்தை முன் உணர்ந்து, அதனை தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்” என தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) கூட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஒன்றிய அரசின் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, உரிமைகளை பாதுகாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 05.03.2025-ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டறிந்தார். அந்தக் கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.