புதுடெல்லி: இன்று (டிச.12) நாடாளுமன்ற மக்களவையில் பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஐயூஎம்எல் தேசியத் துணைத் தலைவர் கே.நவாஸ்கனி எம்பி உரையாற்றினார்.
ராமநாதபுரம் தொகுதி எம்பியான கே.நவாஸ்கனி தனது உரையில் பேசியது: “பேரிடர் மேலாண்மை என்பது அவசரமான காலகட்டத்தில் அந்தந்த சூழலுக்கு தகுந்தார் போல் முடிவெடுத்து துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பணி. அது மத்திய அரசின் ஒத்துழைப்போடு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய பணி. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு வகையிலான இயற்கை புவியியல் அமைப்பிலானது. எனவே, அந்தந்த மாநிலங்களுக்கு எந்த வகையில் பேரிடர் மேலாண்மை மேற்கொள்ள முடியும் என்பது அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் உகந்தது. ஆனால் இந்த மசோதா மத்திய அரசிற்கு அதிகாரங்களை குவித்து மாநில உரிமைகளை பறிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.