ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் மற்றும் வட மாநிலங்களில் பருவமழை பாதிப்புகளால் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகள் மற்றும் பொதுமக்களின் உடமைகள் சேதமடைந்துள்ள நிலையில், மக்களை காப்பாற்ற இந்திய ராணுவமும் களமிறங்கி ஆபத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்டிருப்பது பெரும் பாராட்டுக்குரிய செயலாக அமைந்துள்ளது. புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற ஆபத்து காலங்களில் பொதுமக்களை மீட்கவும், உதவவும் மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து வருகின்றன.
அவர்களுடன் சமீபகாலமாக இந்திய ராணுவமும் மீட்பு பணிகளில் ஈடுபடுவது நாட்டு மக்களை பெருமையடையச் செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள லாசியான் பகுதியில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு அதிக அளவில் இருந்ததால் மீட்பு பணிக்கு உதவ ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ராணுவத்தின் 3 சீட்டா ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 5 எம்ஐ -17 ரக ஹெலிகாப்டர்கள், ஒரு சினூக் ஹெலிகாப்டர் இணைந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 27 பேரை பாதுகாப்பாக மீட்டதுடன் நிவாரணப் பொருட்களும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.