புதுக்கோட்டை: புதுகை அருகே பைக்கில் வந்த வாலிபரை வழிமறித்து மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள், அங்கிருந்த டாஸ்மாக் கடையை சூறையாடினர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பன்னீர் மகன் முருகேசன்(25). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்றிரவு 7 மணிக்கு மழையூர் கடைவீதியில் இருந்து தனது பைக்கில் வீட்டுக்கு சென்றார். மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது பைக்கை வழிமறித்த 4 பேர் கும்பல் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் முருகேசன் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே இறந்தார். தகவலறிந்ததும் மழையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே முருகேசன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். கொலை சம்பவம் நடந்ததால் விபரீதம் ஏற்படும் என்று கருதி டாஸ்மாக் கடையை மூடி விட்டு பணியாளர்கள் சென்று விட்டனர். இந்நிலையில் கொலை சம்பவத்துக்கு டாஸ்மாக் கடை இருப்பது தான் காரணம் என்று கூறியவாறு முருகேசனின் உறவினர்கள் மற்றும் மக்கள் அந்த கடையின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை, பெயர் பலகை, டேபிள், சேர், மின்விளக்குகளை அடித்து நொறுக்கினர். மேலும் டாஸ்மாக் கடை மீது கற்களை வீசி தாக்கினர். இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டாஸ்மாக் கடை வளாகத்தில் இருந்து பொதுமக்களை வௌியேற்றினர்.
இதைதொடர்ந்து இரவு 9 மணி முதல் மழையூரில் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யா வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குற்றவாளிகளை விரைவில் பிடிப்பதாக அவர் உறுதியளித்ததால் நள்ளிரவு 12 மணிக்கு சாலை மறியலை மக்கள் கைவிட்டனர். அதிகாலை வரை குற்றவாளிகளை கைது செய்யாததால் இன்று காலை 6 மணிக்கு 200க்கும் மேற்பட்டோர் திரண்டு மீண்டும் அதே இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
The post பைக்கை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை; டாஸ்மாக் கடை சூறை, மக்கள் சாலை மறியல்: புதுகை அருகே பதற்றம் appeared first on Dinakaran.