கள்ளக்குறிச்சி: பைக் கவிழ்ந்த விபத்தில் மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள். அவர்கள் ரேசில் ஈடுபட்டபோது இந்த விபத்து நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்துமுனை சந்திப்பில் இருந்து நேற்றிரவு 9.30 மணி அளவில் நகரப்பகுதியை சேர்ந்த முருகன் மகன் மோகன்ராஜ் (17) மற்றும் சுரேஷ் மகன் ஹரிஷ் (18) ஆகிய இருவரும் ஒரே பைக்கில் ஆவியூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோகன்ராஜ் பைக்கை ஓட்ட, பின்னால் ஹரிஷ் அமர்ந்திருந்தார். சைலோம் பகுதியில் ைபக் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், பைக்கில் சென்ற மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் விபத்தில் இறந்த மோகன்ராஜ் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்ததாகவும், ஹரீஷ் தற்போது 12ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் அடிக்கடி ரேசில் ஈடுபட்டு வருவதாகவும், நேற்றிரவும் அதேபோல் பைக் ரேசில் ஈடுபட்டதால் பைக் கவிழ்ந்து இருவரும் பலியானார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பைக் விபத்தில் 2 பேர் பலி: ரேசில் ஈடுபட்டார்களா? appeared first on Dinakaran.