கோவை: “பொங்கல் பண்டிகையின் 'ஆன்மா' ஆன்மிகம். இந்த ஆன்மாவை அகற்றிவிட்டு, பொங்கல் பண்டிகையின் முக்கிய நோக்கத்தை சிதைக்க அதிகார ஆணவத்தோடு, முயற்சிகள் நடக்கின்றன. சூரியனை வழிபடாமல் வெறுமனே பொங்கல் வைத்து சாப்பிட்டால், அது பொங்கல் பண்டிகையாகாது. எத்தனை திசைதிருப்பல்கள், அழிச்சாட்டியங்கள் நடந்தாலும் பொங்கல் பண்டிகையின் ஆன்மாவான ஆன்மிகத்தை அகற்ற முடியாது.” என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியா என்பது பண்டிகைகளின் நாடு. பண்டிகைகள், கொண்டாட்டங்கள் இல்லாத மாதங்களே இல்லை. மார்கழி கடைசியில் வரும் 'போகி', தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் 'பொங்கல் திருநாள்', அடுத்த நாள், 'மாட்டுப் பொங்கல்', அதற்கு மறுநாள், 'காணும் பொங்கல்' என நான்கு நாட்கள் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகையே பொங்கல்.