சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, புறநகரில் உள்ள துணிக் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், பெரும்பாலானோர் வரும் 10-ம் தேதி இரவே சொந்த ஊர்களுக்கு புறப்பட திட்டமிட்டிருப்பதால், நேற்றே துணிக்கடைகளுக்கு சென்று புத்தாடைகளை வாங்கத் திட்டமிட்டிருந்தனர். இதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வட சென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை, எம்சி சாலையில் உள்ள ஏராளமான துணிக் கடைகளில் மக்கள் குவிந்ததால், அப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளின் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து பழைய வண்ணாரப்பேட்டை செல்லும் சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்களை போலீஸார் திருப்பிவிட்டனர்.