சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, ஜன.10-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னையில் வசிக்கும் மக்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது, சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவது வழக்கம். அந்த சமயங்களில் மக்களின் வசதிக்காக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும், ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.