சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னை திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம், பெருங்களத்தூர் பகுதிகளில் 2 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 9 நாள் விடுமுறைக்குப்பின் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வேலை, கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட வசதிகளுக்காக சென்னையில் லட்சக்கணக்கானோர் தங்கியுள்ளனர். பலர் குடும்பத்துடனும், சிலர் தங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தங்கியுள்ளனர். இவர்களில் சொந்த வீட்டை சென்னையில் வாங்கியிருந்தாலும் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை சொந்த ஊர்களில் தான் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
இதனால் மக்கள் உற்சாகமடைந்தனர். அதாவது, ஜனவரி 2ம் தேதி பள்ளி தொடங்கி ஒரு வாரம் தான் வகுப்புகள் நடைபெற்ற நிலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. குறிப்பாக ஜனவரி 11ம் தேதி தொடங்கி ஜனவரி 19ம் தேதி வரை விடுமுறை கிடைத்தது. இந்த விடுமுறையை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும் சொந்த ஊர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் மூலம் சென்றனர். இந்த நிலையில் பொங்கல் விடுமுறை நேற்றுடன் முடிந்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் இயங்குவதால் நேற்று மதியம் முதலே மக்கள் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க பலர் சனிக்கிழமையே சென்னை திரும்பினர். ஆனாலும் சென்னையில் இருந்து இந்த ஆண்டு ரயில், பேருந்துகள், சொந்த வாகனங்கள் மூலம் சுமார் 15 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக கணக்கிடப்பட்ட நிலையில் இன்றும் சென்னை திரும்பும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காலை முதலே சென்னை திரும்பி வருவதால் திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். பல மணி நேரம் முன்கூட்டியே புறப்பட்டும் சென்னையை அடைய முடியாமல் பலர் திணறினர்.
சுங்கச் சாவடிகளில் நேற்று முதல் தொடங்கிய நெருக்கடி இன்று காலை வரை தொடர்ந்தது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வருவோருக்கு நுழைவு வாயிலாக உள்ள கிளாம்பாக்கம், பெருங்களத்தூரில் 2 கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. மதுராந்தகம் அருகே ஆத்தூர், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடிகள் வழியே நேற்றிரவு முதல் இன்று காலை வரை தென்மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்து, கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலமாக சென்னையை நோக்கி படையெடுத்தனர். இதனால் ஆத்தூர், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி முதல் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி முதல் தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலையில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இதனால் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஊர்ந்தபடி சென்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் சென்னை நகருக்கு மின்சார ரயில்கள் மூலம் கிளம்பி சென்றனர். இதனால் புறநகர் ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. காட்டங்குளத்தூரில் இருந்து தாம்பரம் வரை அதிகாலை 4 மணி முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 9 நாள் விடுமுறைக்கு பின்பு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின. இதனால் கடந்த ஒரு வாரமாக அமைதியாக இருந்த சென்னை சாலைகள் இன்று அதிகாலை முதல் மீண்டும் பரபரப்பாக செயல்பட தொடங்கின.
The post பொங்கல் பண்டிகை முடிந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னை திரும்பினர்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்: 2கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்தன appeared first on Dinakaran.