தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு கவனம் கொள்ளத் தக்க படைப்புகள் அதிகளவில் வெளிவருகின்றன. பழமையான நீதிநெறிக் கதை சொல்லல் முறையில் இருந்து விலகிப் புதிய பாடுபொருள்கள், புதிய மொழிநடையில் பல படைப்புகள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2024ஆம் ஆண்டிலும் சிறார் இலக்கியச் சூழலில் ஆக்கபூர்வமான முயற்சிகள் நடைபெற்றன.
முன்மாதிரியான சிறார் கதைகளைக் கொண்ட யூமா வாசுகியின் ‘தன்வியின் பிறந்த நாள்’ நூலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான பாலசாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அதற்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்ட மலையாள எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், ‘யூமாவின் படைப்புகளை மிகுந்த மகிழ்ச்சியோடு மொழிபெயர்ப்பதாக’ பகிர்ந்துகொண்டார்.
கறுப்பு நிறம் அசுத்தமானது; அழுக்கான மனிதர்கள் குற்றவாளிகள் எனும் பொதுப்பிம்பத்தை உடைக்கும் வகையிலான படைப்புகள் பெரியவர்களுக்கான இலக்கியத்தில் அதிகம் உள்ளன. சிறார் இலக்கியத்திலும் அது நீள்கிறது. எருமைமாட்டை இழிவாகப் பார்ப்பதை உடைத்து, மாற்றுப் பண்பாடாக எருமையைக் கொண்டாடி எழுதப்பட்ட சிறார் கதைகளின் தொகுப்பு ‘எருமையின் நிழல்’. நீதிமணி எழுதிய இந்நூலில் சின்னஞ்சிறு கதைகள் கவித்துவம் நிரம்பியவையாக உள்ளன.