புதுடெல்லி: பிரதமர் மோடி மாணவர்களுடன் 8-வது முறையாக பங்கேற்கும் தேர்வு குறித்து ஆலோசிப்போம் நிகழ்ச்சிக்கு, இது வரை 2.79 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
தேர்வு எழுதும் மாணவர்களுடன், தேர்வு குறித்து ஆலோசிக்கும் (பரிக்ஷா பே சர்ச்சா) நிகழ்ச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் மோடி பங்கேற்று கலந்துரையாடி வருகிறார். இதில் தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார். இதன் முதல் நிகழ்ச்சி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு குறித்து ஆலோசிக்கும் நிகழ்ச்சி 8-வது முறையாக விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது.