* வளர்ச்சி திட்ட பணிகள் தீவிரம்
* அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நேற்று 2வது நாளாக நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அரசு மருத்துவமனை, மாணவியர் விடுதி மற்றும் காலை உணவு திட்டத்தின் தரம் ஆகியவற்றினை கலெக்டர் மோகனசந்திரன் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் மக்களை தேடி அரசு அலுவலர்கள் என்பதற்கு ஏற்ப மக்களுடன் முதல்வர், உங்களை தேடி உங்கள் ஊரில், மக்கள் நேர்காணல் முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள்வசிக்கும் இடத்திற்கே நேரில் சென்று கலெக்டர் தலைமையிலான உயர் அலுவலர்கள் மூலம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகின்றன.
அதன்படி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 24 மணி நேர ஆய்வு பணியாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் துவங்கி நேற்று காலை 10 மணியிடன் நிறைவடைந்ததது.
இதில் கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு பணி மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் பணியில் ஈடுபட்டனர். இதனையொட்டி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் உயர் அலுவலர்கள் கோரிக்கை மனு பெற்றார்.
இந்நிலையில் முதல் நாளான நேற்று முன்தினம் கலெக்டர் மோகனச்சந்திரன் இந்த குடவாசல் தாலுகாவிற்குட்பட்ட சிமிழி ஊராட்சியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மாணவர்களிடம்ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும் கல்வி மற்றும் வாசிப்புத் திறன் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.மேலும் அதே ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம்திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணியினை ஆய்வு செய்தார்.
மேலும் மஞ்சக்குடி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள நியாய விலை கடையில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தநிலையில் அங்கு ரூ. 16 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தினையும் ஆய்வு செய்தார். மேலும் திருவிடச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் வருகைப் பதிவேடு, சிகிச்சை முறை போன்றவை குறித்து ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் குடவாசல் ஒகை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வருகை பதிவேடு, கல்வி, வாசிப்பு திறன் ஆகியவற்றினை ஆய்வு செய்தவுடன் மதிய உணவு தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும் அங்குள்ள கிளை நூலகம், இ- சேவை மையம் போன்றவற்றினையும் ஆய்வு செய்த நிலையில் குடவாசல் தாலுகா அலுவலகத்தில் கோப்புகளையும் ஆய்வு செய்துபொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் அரசு தொடர்பான கோப்புகளை உரிய முறையில் பராமரித்திட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் 2வது நாளாக நேற்று காலை அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் விபரம் சிகிச்சை முறைகள், மருந்துகள் இருப்பு, மருத்துவமனைக்கான தேவைகள் போன்றவற்றினை கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அங்குள்ள ஆதிதிராவிடர் நலமாணவியர் விடுதியினையும் ஆய்வு செய்தார். விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் மோகன சந்திரன் கூறுகையில், இந்த குடவாசல் தாலுகா முழுவதும் 63 வருவாய் கிராமங்களில் இருந்து பொதுமக்களிடம் மொத்தம் 165 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
The post பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய 2வது நாளாக களமிறங்கி செயல்படுத்திய அரசு இயந்திரம் appeared first on Dinakaran.