மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சியை நம்பி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் என யார் வருகிறார்களோ, அவர்களை இணைத்துக் கொண்டுதான் தேர்தல் களத்திற்கு போகப் போகிறோம். நாங்கள் விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்தோமா? நீங்கள் இது விவகாரமாக இதுபற்றி கருத்து சொல்பவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
சீமான் முதலில் பொது இடங்களில் பெண்களை மரியாதையாக பேச வேண்டும். பெண்களை வைத்துக் கொண்டே, ஒரு பெண்ணை பற்றி இழிவாக பேசுகிறார். அவர் பேச்சு அனைவர் முகத்தையும் சுழிக்க வைக்கிறது. சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதை கிழித்ததற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதைப்பற்றி என்ன கருத்து சொல்வது? என்னதான் இருந்தாலும் தேர்தல் களத்திற்கு வரும்போது, அதிமுகவும், திமுகவும்தான் களத்தில் நிற்கும். மற்ற கட்சியெல்லாம் அடிபட்டு போகும்.
இவ்வாறு தெரிவித்தார்.
* பெண்களை சீமான் மதிக்க வேண்டும்: அன்புமணி பேட்டி
கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: மறுசீரமைப்பு பிரச்னையை எடுத்துக் கொண்டால், மார்ச் 5ம் தேதி தமிழ்நாடு முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார். அதில் பாட்டாளி மக்கள் கட்சியும் நிச்சயம் கலந்து கொள்ளும். கோவைக்கு வந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறும்போது, தென் மாநிலங்களில் ஒரு சீட்டைகூட நாங்கள் குறைக்க போவதில்லை என்று கூறினார்.
எவ்வளவு அதிகப்படுத்துவோம் எனவும் கூறவில்லை. ஒன்றிய அரசு அதிகப்படுத்தும் விழுக்காடு சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் வேண்டுகோள். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்கவில்லை, என்றால் நிதியை வழங்க மாட்டோம் என கூறினார். இப்படி கூறுவது மிக மிக தவறானது.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, சீமான் குறித்த கேள்விக்கு, சீமான் நிச்சயமாக யாராக இருந்தாலும் பெண்களை மதிக்க வேண்டும் என்றார். தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு, “தேர்தல் அடுத்த ஆண்டு வரப்போகிறதே வரும்போது அதை பற்றி அறிவிப்போம்’’ என்றார். ராமதாஸ் ஐயாவுக்கும் அன்புமணிக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருக்கிறது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு புறப்பட்டார்.
The post பொது இடத்தில் பெண்களை மரியாதையா பேசுங்க சீமான்: செல்லூர் ராஜூ அட்வைஸ் appeared first on Dinakaran.